நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், வரும் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஈரோடு மூங்கில்பாளையத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமையகம் வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு :
மக்கள் சந்திப்பு நடைபெறும் ஒவ்வொரு பாக்ஸிலும் காவல் துறை அனுமதித்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருப்போர், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்; அவர்கள் வீட்டிலிருந்தே நேரலை மூலம் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தலைவர் விஜய் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் அவரது வாகனத்தை பின்தொடர்வதும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடுமையாகத் தவிர்க்க வேண்டும்.
பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட எந்தவித வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. போக்குவரத்து விதிகள் முழுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.
காவல் துறை அனுமதித்த இடங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும், செல்லும் மற்றும் திரும்பும் வழிகளிலும் சட்டம்-ஒழுங்கை பேணும் வகையில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.
தன்னார்வலர்கள் சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, உரிய அனுமதி இல்லாமல் பிளக்ஸ், பேனர், கொடி கம்பங்கள் அமைக்கக் கூடாது.
அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், வாகனங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) உள்ளிட்டவற்றின் மீது ஏறுவதும், அருகில் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும்.
மக்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லை என்பதே தலைவர் விஜயின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள், அவரது ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாகவும், நிகழ்ச்சி வெற்றியடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
