சென்னை :
இந்தியாவின் நீர்ப்பாசனத் துறையில் மறக்க முடியாத பங்களிப்பை செலுத்திய ஆங்கிலேய இன்ஜினியர் ஆர்தர் காட்டன், 1803-ஆம் ஆண்டு மே 15-ம் தேதி இங்கிலாந்தின் செஷைரில் பிறந்தார். 15-வது வயதிலேயே கிழக்கிந்திய கம்பெனியில் பொறியாளராகச் சேர்ந்த அவர், 1821-ஆம் ஆண்டு முதன்முறையாக மதராஸ் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியமர்ந்தார்.
பின்னர் தமிழ்நாட்டின் நீர்நிலைகளை பராமரித்து, பாசனத்துக்கான திட்டங்களை செயல்படுத்திய அவர், 1829-இல் காவிரி பாசனப் பகுதியின் தனிப்பட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டார். அப்போது காவிரியின் வெள்ளம்–வறட்சி சூழ்நிலையை கவனித்த அவர், சோழர்கள் காலத்தில் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணையின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.
1830-இல் கல்லணையின் ஒரு பகுதியை பிரித்து மணல் போக்கிகளை உருவாக்கிய ஆர்தர் காட்டன், அதன் அடித்தளத்தைக் கண்டு வியப்புடன் “இதுவல்லவோ கிராண்ட் அணை!’ என்று தெரிவித்ததாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. தமிழர்களிடம் மணற்படுகையிலான அடித்தள கட்டுமான நுட்பத்தை கற்றுக்கொண்டதாகவும் அவர் எழுதியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கல்லணையின் மேற்பகுதியில் புதுப்பிப்பு பணிகள், திருச்சி முக்கொம்பில் மேலணை (1836), கீழணை (1840), வீராணம் ஏரி தொடர்பான நீர்பாசன திட்டங்களை உருவாக்கினார். இதன் மூலம் காவிரி நீர், விவசாயிகளின் வயல்களில் பாயத் தொடங்கியது. தமிழகம் பசுமை சூழ்ந்த தஞ்சை டெல்டாவாக மாறியது.
இந்த அனுபவங்களைத் தொடர்ந்து, ஆந்திராவில் கிருஷ்ணா (விஜயவாடா அருகே – 1849) மற்றும் கோதாவரி (தவளேஸ்வரம் அருகே – 1873) ஆறுகளில் அணைகள் கட்டினார். வானம் பார்த்த ஆந்திரா, முப்பொரு பயிர் விளையும் நிலமாக மாறியது. ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாசனத் திட்டங்களை மேற்கொண்டார். அவரது திட்டங்கள் மூலம் இந்தியாவில் 50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி உருவானது.
மேலும், மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்ற திட்டங்களுக்கு துவக்கக் கருத்துக்களையும் முன்மொழிந்தவர் ஆர்தர் காட்டன். 1835-ஆம் ஆண்டிலேயே அவர் மேட்டூர் அணைக்காக மைசூருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று பேசப்படும் காவிரி-கங்கை இணைப்பு திட்டத்தையும் முதல் முறையாக முன்வைத்தவர் இவர்தான்.
இந்திய நீர்ப்பாசனத் துறையில் அவர் செய்த அதிபெரும் பங்களிப்புக்கு இந்திய அரசு ‘இந்திய நீர்ப்பாசனத் தந்தை’ என அங்கீகாரம் அளித்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் அவருக்கென 3,000 சிலைகள், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவாக ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெறுகின்றன.
ஆனால், தமிழர்களுக்காக வேலை செய்தும், தமிழர்களிடம் தொழில்நுட்பம் கற்றும், தமிழகத்தில் அணைகளைக் கட்டியும், தமிழ்நாடு அரசும் மக்களும் அவரை பாராட்ட மறந்துவிட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர் விவசாயிகள். எனவே, ஆர்தர் காட்டனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, பாடநூல்களில் அவரைப் பற்றி இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.