சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சத்துணவு பெண் ஊழியர்கள் கைது :-
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இதில் 313 வது வாக்குறுதியாக சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்கப்படும், பென்ஷன் தொகை அதிகரித்து தரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வாக்குறுதிகளாக தரப்பட்டது. தமிழக அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சத்துணவுப் பெண் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.














