சென்னை:
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68ஆவது நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய், சென்னையின் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, தனது சமூக வலைத்தளத்தில் விஜய்,
“சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காக களமாடியவர் விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியவை,” என்று பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி, குடும்பத்தினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், செல்லூர் பகுதியில் உள்ள பொதுமக்களும் பெருமளவில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அங்கு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தனித்தனி நேரத்தில் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.
இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கடும் பாதுகாப்பு அமர்த்தினர். மொத்தம் 28 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.