சென்னை : யானை சின்னத்தை தவெக கட்சி பயன்படுத்துவதைத் தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால மனுவை திரும்ப பெற்றுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் பெரியார் அன்பன், தவெக கட்சி தனது கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில், இறுதி தீர்ப்பு வரும் வரை யானை சின்னம் பயன்பாட்டுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று (11.7.2025) நீதிபதி பி. சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், “இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்” என நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில், “தங்களுக்கு எதிரான இடைக்கால உத்தரவு பிறந்துவிட்டால், அது பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைமையில் புதிதாக தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதகமாக அமையும்” எனக் கூறி, பகுஜன் சமாஜ் கட்சி, இடைக்கால மனுவை வாபஸ் பெறும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்தது.
நீதிபதி இடைக்கால உத்தரவை தள்ளிப் போட மறுத்ததைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி தனது இடைக்கால மனுவை வாபஸ் பெற்றதுடன், வழக்கை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அதன் மாநிலத் தலைவர் ஆனந்தன் அறிவித்தார்.