“மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை !” – அமைச்சர் சிவசங்கர்

சென்னை :

மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின்கட்டணத்தை மறுபரிசீலனை செய்து, தேவையெனில் உயர்த்தும் நடைமுறை நிலவி வருகிறது. அந்த அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு மின் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்பட்டது. தொடர்ந்தும் 2023-இல் ஜூலை மாதத்தில் 2.18 சதவீதம் மற்றும் 2024 ஜூலை மாதத்தில் 4.8 சதவீதம் வரை கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 2025-இல் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதன் அடிப்படையில், ஜூலை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதால், பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், மின் கட்டணம் உயர்வு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை. தற்போதைய இலவச மின்சார சலுகைகள் தொடரும். மேலும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் இதுவரை எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை,” என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மக்கள் மத்தியில் ஏற்பட்ட பதட்டம் குறைந்துள்ளதுடன், தற்போதைக்கு வீட்டு மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறலாம்.

Exit mobile version