கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் வீடிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இரும்பு ராடுகள் கொண்டு வயோதிப தம்பதியை மிரட்டி, 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரிவர்மன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். வரும் ஜூலை 7 ஆம் தேதி தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், விழாவில் கலந்துக்கொள்ள அவர் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். விழாவுக்காக வங்கி லாக்கரில் இருந்து 200 சவரன் தங்க நகைகளை எடுத்துவந்து வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கேசரிவர்மன், தனது மனைவி மற்றும் மகள்களுடன் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றிருந்தார். அப்போது, வீட்டில் அவரது வயோதிப தாய், தந்தை மட்டுமே இருந்தனர்.
இந்த தகவலைப் பயன்படுத்தி, மர்மநபர்கள் இரும்பு ராடுடன் வீட்டுக்குள் நுழைந்து, இருவரையும் தாக்கி, தனி அறையில் மிரட்டி வைத்தனர். மேலும், “சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்” என எச்சரித்த அவர்கள், பீரோவில் இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர், சம்பவத்தால் அதிர்ந்த கேசரிவர்மனின் தந்தை மகனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார், கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயோதிப தம்பதியை மிரட்டி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.