சென்னை:
தமிழகத்தின் வாக்குரிமையை பறிக்கும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கெடுத்து வருகிறார் என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தேர்தல்கள் வெளிப்படையாகவும் முறைகேடுகள் இல்லாமலும் நடைபெற வேண்டும் என்பதில் திமுகவுக்கு எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், போதுமான கால அவகாசம் இன்றி அவசரமாக SIR பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கியிருப்பது சந்தேகத்துக்கிடமானது என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்,” என்றார்.
“பாஜக எதிர்ப்பாளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயலும் சதியை தடுக்க திமுக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளது. மேலும், ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையைப் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், பாஜக கூட வழக்கு தாக்கல் செய்யாத நிலையில் அதிமுகவோ SIR-ஐ ஆதரித்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். ‘உங்க ஓட்டு உங்களுக்கு இல்லை’ என்ற நிலை உருவாக்கும் சதிக்கு எடப்பாடி பழனிசாமியும் பங்கெடுத்து வருகிறார். பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படும் அதிமுக, அதன் தலைவரின் வழியாக வாக்குரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது,” என அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்.
“CAA, வேளாண் சட்டம், மின் உதய் திட்டம், அரிட்டாப்பட்டி சுரங்கப் பிரச்சனை உள்ளிட்ட பாஜக அரசு கொண்டு வந்த பல சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவாக இருந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது SIR விவகாரத்திலும் பாஜகவின் ‘அடிமை’ போல நடந்து கொள்கிறார்.
பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கூட கூட்டணி கட்சிகள் SIR-க்கு எதிராகப் பேசும் நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக மட்டும் ஆதரவாக வழக்கு போடுவது வெட்கக்கேடாகும். தமிழர்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்க முயல்வது போன்ற இந்தச் செயலுக்கு மக்கள் தக்க பதிலடி அளிப்பார்கள்,” என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

















