சிவகங்கை மாவட்டத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் மரணம், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வழக்கில், சிறப்பு தனிப்படை காவலர்களான பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா மற்றும் ஆனந்த் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வரும் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டும், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பெரிய கருப்பன் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அவரது சகோதரரிடம் தொலைபேசி மூலம் உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, “அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. ‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா?” என முதல்வரை நேரடியாக கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் அவர் கூறியதாவது :
“முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல், அவரது பொறுப்பின்மையை வெளிக்காட்டுகிறது. அஜித் குமாரின் மரணம் என்பது சாதாரண விஷயமல்ல. அவரை இழந்த குடும்பத்தினரிடம் ‘தைரியமாக இருங்கள்’ என்று கூறும் தைரியம், தங்கள் மீது குற்ற உணர்ச்சி இல்லாததைக் காட்டுகிறது.
‘என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்’ என்கிற முதல்வரிடம், அந்த இளைஞரின் உயிரை திரும்பக் கொடுக்க முடியுமா ?
இது மட்டுமல்ல, கள்ளக்குறிச்சி மரணங்கள், பிற காவல் துறை அக்கறையின்மை சம்பவங்களைப் போலவே இதுவும் ஒரு மர்மம்.
நான்கு நாட்கள் கழித்து, நீதிமன்றத்தில்தான் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதுவும் எதிர்க்கட்சியான எங்களின் சட்ட நடவடிக்கையால் மட்டுமே.
‘நடக்கக் கூடாதது நடந்துடுச்சு’ என்று சொல்லும் முதல்வரிடம் எந்த உரிமையோ, எதார்த்த உணர்வோ காணப்படவில்லை. இது 25வது சம்பவம். மக்கள் இன்னும் ஏமாறக்கூடாது!”
எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு பதிவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது.

















