தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவல் தீவிரமாகி விட்டதாகவும், கஞ்சா ஆம்லெட் கூட சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் 67 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஊழல் சம்பவங்களில் உள்ளூர் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதோடு, போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. கஞ்சா சாக்லேட் மட்டுமல்லாமல், ஆம்லெட்டிலும் கஞ்சா சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை நடக்காத இடம் இல்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் அபாயம் நிலவுகிறது,” என விமர்சித்தார்.
மேலும், “சட்டசபையில் பலமுறை இதுபற்றி எச்சரித்தோம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் கவனிக்கவில்லை. மூன்றரை ஆண்டுகள் கடந்த பின் தான் போதைப்பொருளுக்கு எதிராக பேசி வருகிறார். இப்படி தாமதமாக விழித்துக் கொள்கிற முதல்வர் தமிழ்நாட்டுக்கு தேவையா?” என்று கேள்வியெழுப்பினார்.
அவரது உரையால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தாலும், கட்சியின் உள்ளக நிர்வாகப் பிரச்சினைகளை சரி செய்யாமல் இருப்பது தொடர்பாக அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.