சேலம் :
“ஒருவர் பச்சை பஸ்ஸிலும், மற்றொருவர் மஞ்சள் பஸ்ஸிலும் பிரச்சாரம் செய்ய போகிறார்கள். ஆனால் கடைசியில் நம்ம முதல்வரின் பிங்க் பஸ்தான் எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணி ஜெயிக்கப் போகிறது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், 5 ஆயிரத்திற்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் உதயநிதி ஸ்டாலின், “சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வங்கி கடன் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம். இதை முதல்வர் கடன் தொகை என்று பார்க்கவில்லை. உங்களின் உழைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாகத்தான் பார்க்கிறார். ஆனால் சிலர் இதை பொறுக்காமல் விமர்சனம் செய்கிறார்கள்.
இப்போது டிவிகளில் ஒவ்வொருத்தரும் கலர் பஸ்களை எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்ய போறாங்க. ஒருத்தர் பச்சை பஸ், இன்னொருத்தர் மஞ்சள் பஸ். ஆனா கடைசியில் ஜெயிக்கப்போவது உங்களுக்காக முதல்வர் கொண்டு வந்த பிங்க் பஸ்தான்” எனக் கூறினார்.
அவர் மேலும், “திராவிட மாடல் அரசு 2026-இலும் தொடர, நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், சேலத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் சதாசிவம் (அன்புமணி ஆதரவாளர்), அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) ஆகியோர் இருவரும் திமுக அரசை பாராட்டினர். அதற்கு பதிலளித்த உதயநிதி, “இவ்வாறு ஒருமித்த பாராட்டுகளே தொடர்ந்து இருக்க வேண்டும். சேலம் மாவட்ட வளர்ச்சிக்காக திமுக அரசு பல திட்டங்களை செய்து வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சிக்குள் மோதல்கள் நீடித்து வருகின்றன. அன்புமணிக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் செயல்பட, ராமதாஸுக்கு ஆதரவாக மற்ற எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் “ஒற்றுமை” குறித்து உதயநிதி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.