“எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.-யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பது ஏற்க முடியாதது” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாமக்கலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மயிலாடுதுறை மாவட்ட டி.எஸ்.பி. சுந்தரேசன் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “சீருடை அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு நேரடியாக பேட்டி அளிக்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், இன்றைய நிலைமை அந்த எல்லைகளை தாண்டி விட்டது. அவரை கடுமையாக துன்புறுத்தியதால், அவரே பத்திரிகைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதுபோன்று எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், அவரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது,” என்றார்.
மேலும், “இந்த விவகாரத்தில் தமிழக உள்துறை அமைச்சராக இருக்கிற முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, குற்றமற்றவருக்கு நீதியளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “சர்ச்சை ஏதுமில்லை. அனைத்து தலைவர்களும் தங்கள் கருத்துகளை பொதுவெளியில் வெளியிட்டுள்ளனர். எல்லோரும் ஒரே நோக்கத்தில் உள்ளோம். அந்த நோக்கம் என்னவென்றால், திமுகவை அகற்ற வேண்டும் என்பதே. தேர்தலுக்கு முன்பும் பிந்தும் ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்,” எனக் கூறினார்.