பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புதிய போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில் “திராவிட வெற்றிக் கழகம்” என்ற தலைப்புடன், பொதுமக்கள் மத்தியில் நிற்கும் அபிராமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால், அவர் அரசியலுக்குள் நுழையவிருக்கிறாரா அல்லது இது வெறும் திரைப்பட விளம்பர யுக்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தலைமையில் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” தொடங்கப்பட்ட நிலையில், அபிராமியின் போஸ்டரில் இடம்பெற்ற “திராவிட வெற்றிக் கழகம்” என்ற பெயர், ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளையும் ஊகங்களையும் தூண்டியுள்ளது.
அபிராமி வெங்கடாச்சலம் 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றார். 2016 ஆம் ஆண்டு யூடியூப் சீரிஸ் Ctrl Alt Del மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், 2018 இல் விஜய் தேவரகொண்டா நடித்த NOTA படத்தில் வாய்ப்பு பெற்றார். பின்னர் களவு, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி, வல்லான் உள்ளிட்ட பல படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் நடித்து வருகிறார்.
இதேபோன்ற சூழலில், சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் பார்த்திபனும் “அரசியலுக்கு வருகிறேன்” எனும் போன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் பின்னர் அது அவர் நடிக்கும் “நான் தான் சிஎம்” திரைப்படத்தின் பிரமோஷன் எனத் தெரிய வந்தது.
அதுபோலவே, அபிராமியின் “திராவிட வெற்றிக் கழகம்” போஸ்டர் உண்மையில் ஒரு அரசியல் அறிவிப்பா அல்லது புதிய திரைப்படம்/சீரியல் தொடர்பான விளம்பரமா என்பது குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அபிராமி உண்மையிலேயே அரசியலில் குதிக்கிறாரா அல்லது இது ஒரு படத்தின் புரமோஷனா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.