“கூகுள், ஏஐ. மீது முழுமையாக நம்பிக்கை வைக்கக் கூடாது” – முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை :
“எதுவாக இருந்தாலும் கூகுள் அல்லது செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவர்களிடம் உருவாகக் கூடாது. தொழில்நுட்பத்தின் பலன்களையும், மனித சிந்தனையின் ஆழத்தையும் வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு புதியதாக பணியில் சேர்ந்த 2,715 ஆசிரியர்களுக்கு அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

முதல்வர் தனது உரையில் கூறியதாவது :

ஆசிரியரின் பங்கு : ஆசிரியர் என்பவர் பாடப்புத்தக அறிவை மட்டும் போதிப்பவர் அல்ல. வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குபவரும் ஆவார். வகுப்பறையில் உட்கார்ந்து இருப்பவர்கள் சாதாரண மாணவர்கள் மட்டுமல்ல ; நாளைய டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசியல் தலைவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தின் தாக்கம்: அறிவியல், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களை எளிதாகக் கற்றுக்கொள்ள கூகுள், ஏஐ. போன்ற வசதிகள் உருவாகியுள்ளன. ஆனால் “முழுமையாக அதற்கு அடிமையாகி விடக்கூடாது” என்றும், மாணவர்களை சரியான பாதைக்கு வழி நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மனித மதிப்புகள் : அறிவாற்றலுடன் சேர்த்து நேர்மையும் அறமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். சமூக ஒழுக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மாற்று எரிசக்தியின் அவசியம் போன்ற விஷயங்களையும் ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

ஆசிரியர் – மாணவர் உறவு : மாணவர்களை கடுமையாக அழுத்தம் கொடுக்காமல், அன்பாகவும் பக்குவமாகவும் நடத்தினால் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். மாணவர்களுடன் நண்பர்களாக பழகி, அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் கூறினார்.

ரோல் மாடல் : மாணவர்களுக்கு நல்ல முன்மாதிரிகளை அறிமுகப்படுத்தவும், நீங்களே ஒரு முன்மாதிரியாகவும் இருங்கள் என ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு ஆசிரியர்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Exit mobile version