“மீனாகுமாரி கேரவனில் பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவை புரியுமா ?” – விஜய்யை நேரடியாக தாக்கிய வைஷ்ணவி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கியுள்ளார். இதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, மக்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை” எனவும், தனது பிரச்சார பயணத்துக்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.

இந்த அறிக்கைக்கு எதிராக, திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு விஜய்யை நேரடியாக தாக்கியுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது:
“மக்களின் மனமறிந்த அரசியல், தோழமையுடன் கூடிய அரசியல் என நடிகர் என்ற பிம்பத்தை வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் விஜய் அவர்களே! முதலில் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? கட்சித் தொண்டர்களை தொட விடாமல் பவுன்சர்களை வைத்து தாக்குவதும், தடுப்பு கம்பிகளில் கீரிஸ் தடவியும் நடத்துவது மனசாட்சியற்ற செயலாகும். இப்படிப்பட்டவர் ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்கத் தகுதியற்றவர்.”

மேலும், விஜய்யின் அரசியல் வாழ்க்கையை குறிவைத்து, “சொகுசு காரிலும் ‘மீனாகுமாரி கேரவனிலும்’ பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவைகள் தெரியாது. அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் திமுக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றின் பயனடைந்த மக்களுக்கே தெரியும் ‘திராவிட மாடல் அரசு’ என்பது மக்களுக்கான அரசு என்பதை,” என வைஷ்ணவி வலியுறுத்தினார்.

வைஷ்ணவி, தவெகவை விட்டு விலகி திமுகவில் இணைந்த பிறகு தொடர்ந்து விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர் பதிவுகள், விஜய் தொடங்கியுள்ள முதல் பிரச்சார பயணத்தையும் தாக்கி உள்ளன.

Exit mobile version