சென்னை: “2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும். இது ஆணவமாக அல்ல, உழைப்பு, ஆட்சிச் சாதனை, மக்களின் நம்பிக்கையில்தான் என் நம்பிக்கை இருக்கிறது,” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
2026 தேர்தல் வெற்றிக்கான திட்டங்கள் குறித்து பேசுவதற்காக மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்று திமுகவின் மாநில அளவிலான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் உரையில் கூறியதாவது :
“இங்கிருக்கும் ஒவ்வொருவரும் உழைப்பை நிறுத்தாமல் தொடர வேண்டும். சுணங்கி நின்றால் இயக்கம் தேங்கிவிடும். இயக்கம் என்றால் தொடர்ந்து செயல்படுவதுதான். அதனால்தான் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளோம்.
உங்களின் உழைப்பால் நாங்கள் ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறோம். அடுத்து ஏழாவது முறை ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம் நடக்கிறது. நான் சொல்வதையும், கேட்டுக்கொள்வதையும் மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு தொண்டரையும் நான் நம்பி இருக்கிறேன் என்பதைச் சொல்லுங்கள்.”
அவர் மேலும் தெரிவித்ததாவது :
“2026ம் ஆண்டு தேர்தல் என்பது தமிழகத்தை பாஜக–அதிமுக கூட்டணியிடமிருந்து காப்பதற்கான தேர்தல். தமிழகத்தை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே உள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். அந்த கூட்டணியை மக்கள் விரும்பவில்லை; அவர்கள் கட்சியினருக்குள்ளும் அதில் மனக்கசப்பு உள்ளது. மற்ற கட்சிகளும் அவர்களுடன் இணைய விரும்பவில்லை. நமது வெற்றிகளே அவர்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன,” என ஸ்டாலின் தெரிவித்தார்.

















