நடிகர் விஜயைச் சந்திக்கச் சென்னைக்கு வர முயன்ற பாதிக்கப்பட்டவர்களை திமுக தடுத்ததாகவும், அவர்களுக்கு ரூ.30 லட்சம் அளிப்பதாக கூறி மிரட்டியதாகவும், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
பனையூரில் இன்று நடைபெற்ற தவெக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கூட்டம் முடிந்த பின், “விஜய் கரூரில் மக்களைச் சந்திக்க முடியாத நிலையில், அவர்கள் சென்னைக்கு வர முன்வந்தனர். ஆனால் திமுக சார்பில் சிலர் தடுக்க முயற்சித்தனர். ரூ.30 லட்சம் தருகிறோம்; சென்னைக்கு போக வேண்டாம் என்று கூறியதோடு, மிரட்டலும் நடந்துள்ளது. இதையெல்லாம் மீறி தான் மக்கள் விஜயைச் சந்திக்க வந்தார்கள்” என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்கவில்லை; நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு விசாரணையை தான் கோரியிருந்தோம். ஆனால் தற்போது வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் காவல்துறையின் தவறை முதலமைச்சர் ஒப்புக்கொள்வாரா? அதில் காலதாமதமே காரணம் என்று கூறுவார். ஆனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“அழைப்பு வந்தால் தவெக நிச்சயமாக பங்கேற்கும். தற்போது வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்தவர்களை நீக்கியும் போலி பெயர்களை சேர்த்தும் நடைபெறும் செயல்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவை. அப்படியான சூழல் உருவானால், அதனை தவெக கண்டிப்பாக எதிர்க்கும்” என்றார்.

















