சென்னை : கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (45) என்ற திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான இவர், திங்கட்கிழமை மாலை நண்பருடன் அடையாறு பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழு அவரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
தப்பிக்க முயன்ற குணசேகரனை குற்றவாளிகள் ஓட ஓட விரட்டி பிரதான சாலையில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க, உடனே வந்த அடையாறு போலீசார் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இதில், ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த காதல் விவகாரம் இந்தக் கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குணசேகரனின் மகளை காதலித்த மதன் என்ற இளைஞரின் நண்பர், வழக்கறிஞர் கவுதம், இதை ஆதரித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விவகாரம் தொடர்பாக 2024-ல் கவுதம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குணசேகரன் பிரதான குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
இதையடுத்து பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என போலீசார் ஆரம்பக்கட்ட விசாரணையில் கருதுகின்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிக்கையில், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனுஷ் (24) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை, சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.