கோவில் பராமரிப்பில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு காவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலிலேயே இத்தகைய கொடூரம் நடந்துள்ளது. இது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சரியில்லாததை வெளிப்படுத்துகிறது. கோவில் சிலைகள் சேதப்படுத்தல் முதல் உண்டியல் திருட்டு வரை தொடர்ந்து நடைபெறுவது, திமுக அரசு கோவில் பராமரிப்பில் காட்டும் மெத்தனத்தையும், இந்து மதத்துக்கு எதிரான அணுகுமுறையையும் காட்டுகிறது,” என அவர் கூறியுள்ளார்.
மேலும், “மக்களின் மதநம்பிக்கையையும் சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் இந்தச் சம்பவத்தில், அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம் போல கண்துடைப்பு விசாரணை நடத்தாமல், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையாகச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்,” எனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


















