நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், வழிபாடு (7.10.2025) செய்தார். அதன்பின்னர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,
கரூர் நகரில் தவெக தலைவர் ஜோசப் விஜய் கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். ஆனால் இதற்கு முன்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மை இல்லை. நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மிகுந்த நெரிசலில் பக்தர்கள் கிரிவலம் வருவதை சீராக்கி, அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். கடந்த ஆண்டு காவல்துறை இந்து சமய அறநிலையத் துறை உரிய ஏற்பாடுகளை செய்யாத காரணத்தினால் மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா திருவிழாவில் வழிப்பறி, பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது, தடியடி, ரவுடிகள் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. முத்தாரம்மன் தசரா திருவிழாவிலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
ஆந்திராவில் இருந்து கோவிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவர், 2 காவலர்களால் மானபங்கப்படுத்தப்பட்டு அதைத் தொடர்ந்து 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 உயிர்களுக்கும் நீதி வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி மாபெரும் கோரிக்கை பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம். இனிமேலும் இதுபோன்ற மரணங்கள் நிகழக்கூடாது. மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இனிமேல் அரசியல் கட்சிகள் கூட்டம் கூட்டி கெத்து காட்டுவது, சினிமா நடிகர்களை பார்ப்பதற்கு செயற்கையாக கூட்டம் கூட்டுவது, மக்களை காக்க வைப்பது, இத்தகைய கூட்டங்களை தடுக்க வேண்டும்.
நீதிமன்றம், நெடுஞ்சாலை பகுதிகளில், கூட்டங்கள் நடத்தக்கூடாது, மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என கூறியுள்ளது.
தவெக நடத்திய அனைத்து கூட்டங்களிலுமே பொதுச்சொத்துக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் பொது சொத்துக்கள், தடுப்புகள் உடைக்கப்பட்டன. நாமக்கலில் 16 பேர் மயக்கமடைந்தனர். அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தவெக கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை. தவெக அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தேர்தல் கமிஷன் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். அத்தோடு அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்யை கைது செய்ய வேண்டும். 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த, மக்களை பாதுகாக்க தவறிய திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆள்வதற்கு தகுதியற்றவர். விஜய்மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய முடியவில்லை. எனவே இந்த ஆட்சி நீடிக்க கூடாது. இந்த சம்பவத்தில் CBI விசாரணை நடத்த வேண்டும்.
வருங்காலத்தில் இதுபோன்ற மரணங்கள் நிகழாதபடி அரசியல் கட்சி, சினிமா, தேர்தல் பிரச்சாரம் ஆகிய கூட்டங்களை ஒரு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். வெளிநாடுகளைப் போல அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யலாம். மக்கள் கூட்டத்தை காண்பித்து செல்வாக்கை காட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் சென்றார்.