திருச்சி : தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது பதியப்பட்ட வழக்கை கடுமையாக கண்டித்து, அது கட்சியின் செயல்பாட்டை முடக்க ஆளுங்கட்சியான திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையென நடிகர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 7ஆம் தேதி திருச்சியில் காவல் ஆணையரைச் சந்திக்க சென்றபோது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே அதிகரித்து வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், வெற்று விளம்பர மாடல் அரசாக திகழும் திமுக, கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்திலேயே ஆனந்த் மற்றும் த.வெ.க. தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போதைய ஆளுங்கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ தெரியாது, ஆனால் த.வெ.க.வை கண்டு பயத்தில் நடுங்கி வருவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எல்லா கட்சிகளும் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரப் பயணமே நம் கட்சியும் செய்கிறது. ஆனால், த.வெ.க.வின் மக்கள் நல செயல்பாடுகளை மட்டுமே அரசு அஞ்சுகிறது. இதன் ஒரு பகுதிதான் திருச்சியில் ஆனந்த் மற்றும் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என விஜய் தெரிவித்தார்.