மயிலாடுதுறை மாவட்டத்தில் அந்நிய சந்தேக நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடல்சார் ஊடுருவலை தடுக்கும் விதமாக நடத்தப்பட்ட “சாகர் கவாச்” ஒத்திகை நிகழ்வில் தரங்கம்பாடி கடற்கரையில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் ஆய்வு செய்து படகில் அரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பார்வையிட்டார்:-
இந்தியாவில் அந்நிய சந்தேக நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடல்சார் ஊடுருவல் தடுக்கும் விதமாக கடலோர மாவட்டங்களில் மாநில காவல்துறை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் இந்திய அரசின் குழுமங்கள் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் “சாகர் கவாச்” என்ற ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு ஒத்திகை நிகழ்வு கடலோர கிராமங்களில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த ஒத்திகையில் எஸ்.பி தலைமையில் ஏடிஎஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பிக்கள், 9 காவல் ஆய்வாளர், 30 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தரங்கம்பாடி பகுதியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் விசைப்படகில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பயணித்து தொலைநோக்கி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

















