மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு, அதில் 99 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,20,354 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அதில் 1,10,672 மெட்ரிக் டன் நெல், கிடங்குகளுக்கு பாதுகாப்பாக இயக்கம் செய்யப்பட்டுவிட்டன. 18,683 மெட்ரிக் டன் நெல் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் இன்னும் ஓரிரு நாள்களில் கிடங்குகளுக்கு பாதுகாப்பாக இயக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுக்கா மணக்குடி மற்றும் தரங்கம்பாடி தாலுகா கிடாரங்கொண்டான் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மணக்குடியில் சுமார் 5000 நெல் மூட்டைகள், கிடாரங்கொண்டாலின் சுமார் 3000 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவை மழையில் நனையாதவாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, அவை லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு ஏற்றி அனுப்பப்பட்டதை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நளினா, முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் செந்தில் உள்ளிட்ட துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்


















