தருமபுரம் ஆதீனத்தின் கிளை மடமான திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் மறைவுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் இரங்கல்:- அவரைத் தொடர்ந்து தற்போதைய இளவரசு பொறுப்பேற்க பிரார்த்திப்பதாக அறிவிப்பு:-
தருமபுரம் ஆதீனத்தின் கிளை மடமான திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் செவ்வாய்க்கிழமை இரவு சித்தி அடைந்தார். அவரது மறைவுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு: தருமையாதீன முதன்மைச் சீடரும், காசிமடத்தின் 21-வது அதிபருமான ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் பரிபூர்ணம் எய்தினார். காசிமடத்தின் இளவரசாக, அதிபராக 50 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு வகித்தவர். தமிழகம் எங்கும் பல கோயில்களின் குடமுழுக்குகளை தரிசித்தவர். பல அறக்கட்டளைகளை நிறுவியவர். காசி, ராமேஸ்வரம் முதலாய பல அறங்களை செய்தவர். பன்னிரு திருமுறைகளை குறைந்த விலையில் அச்சிட்டு, பல்லாயிரம் கொடுத்தவர். நாம் துறவு ஏற்க வழிவகுத்து, காறுபாறு பதவியும் கொடுத்து எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி படிக்கவைத்து கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி வழங்கியவர். முதலாவது கயிலாயம் தரிசிக்க அனுப்பி வைத்தவர். தருமையாதீன கல்லூரியில் வித்வான் பயின்றவர். அவர் இறையடியில் சேர்ந்தார் எனும் துயரசெய்தி, மனத்தை உலுக்கியது. சைவம் தழைக்க பாடுபட்டவரை இழந்து சமய உலகம் தத்தளிக்கிறது. அன்னாரின் ஆன்மா இறையடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறோம். அவர் விட்டுச் சென்ற பணிகளை பின்தோன்றலான சின்னத்தம்பிரான் (இளவரசு) செய்வதற்கு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை சிந்திக்கிறோம் என அந்த இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
