திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில், 333.26 கோடி ரூபாய் மதிப்பிலான 377 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய்க்கான 211 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், 1,12,294 பயனாளிகளுக்கு 1,000.34 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்துக்கே மட்டும் ஒரு நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், பாலாபுரம் ஊராட்சி நாடு முழுவதும் நீர்நிலைத் தன்னிறைவு ஊராட்சியாக விருது பெற்றது பெருமை என பாராட்டினார்.
ரேஷன் அட்டைகள், வீட்டு மனைப் பட்டாக்கள் உள்ளிட்ட சேவைகள் மக்கள் வீட்டுக்கு வந்து வழங்கப்படும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மிகப்பெரிய அளவில் பயன் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த தொடர்ச்சியாக, ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு மனைப் பட்டா வழங்கப்படுவது சாதனையெனவும் தெரிவித்தார்.
கலைஞர் கனவு இல்ல திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன என்பதை அவர் நினைவுகூர்ந்தார். பிரேமா, டான்யா போன்ற குழந்தைகளுக்கு முதலமைச்சர் நேரடியாக நிவாரணம் வழங்கிய சம்பவங்களை எடுத்துக்காட்டி, “திராவிட மாடல் ஆட்சியின் மனிதநேயம் இதுவே” என்றார்.
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு இந்தியாவிலேயே இல்லாத வகையில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவது முக்கிய முன்னேற்றம் எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அதிக வருமானத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் போன்றவை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய நன்மையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசும் போது, “சில பெண்களுக்கு பெயர் விடுபட்டது பற்றிய குறைகள் முகாம்களில் பெருமளவு பெறப்பட்டது. இதனை சரிசெய்யும் வகையில், வரும் டிசம்பர் 15 முதல் விடுபட்ட மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். அனைத்து தகுதியான மகளிருக்கும் இந்தத் தொகை வங்கி கணக்கில் சேரும்” என்று உறுதியாக அறிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் தலா 3 கோடி ரூபாயில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 50 ஆயிரம் சுயஉதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பல சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















