விவசாய கடன்களை கடன்களைத் தள்ளுபடி செய்யது, உற்பத்தி விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் :-
மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்டத் தலைவர் திரு. ஆர். அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியபோது :-
கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் அரசு உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மூடப்பட்டுள்ள தலைஞாயிறு N.P.K.R.R. கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, இரு போக சாகுபடிக்கும் சேர்த்து ₹30,000 நிவாரணத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்றும் , நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹3,100 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு ₹12,000 வழங்கப்பட வேண்டும்.கரும்புக்கு ஒரு டன் ஒன்றுக்கு ₹4,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இயற்கைச் சீற்றங்களால் 2024-ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். “உலகிற்கே சோறு போடும் விவசாயி இன்று அழிந்து வரும் நிலையில் இருக்கிறான். எங்களது தலைமுறைக்கு அடுத்த தலைமுறை விவசாயத்தைச் செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.
