புதுடில்லி:
தலைநகர் டில்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லியில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அமித்ஷா இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள், தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) இயக்குநர் ஜெனரல், டில்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தின் பிந்தைய அறிக்கையில் அமித்ஷா தெரிவித்ததாவது :
“டில்லி கார் குண்டுவெடிப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில் ஈடுபட்டவர்கள் எவரும் தப்ப முடியாது; அவர்கள் எங்கள் விசாரணை அமைப்புகளின் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்.”
இதேவேளை, ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லி வெடிப்பு சம்பவம் குறித்து தொலைபேசியில் அமித்ஷாவிடம் நலம் விசாரித்தார். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முன்னேற்றம் குறித்து அமித்ஷா அவரிடம் விரிவாக விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


















