மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் திறந்தவெளி என ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் குடோன்களுக்கு அனுப்பாமல் தேங்கி கிடப்பதாலும் புதிதாக கொள்முதல் செய்ய தாமதம் ஏற்படுவதாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2025-26ம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்கிய புதிய விலையில் கடந்த 1ம் தேதி முதல் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கினாலும் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட டேப்களில் சர்வர் ஒர்க்காததால் டோக்கன் பதிவு மற்றும் பில் போட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் நெல்மூட்டைகளை கொண்டுவந்து அடுக்கிவைத்துகொண்டு இரவு பகலாக காவல்காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோடு தொடர்ந்து அறுவடையும் முழவீச்சில் நடப்பதால் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்மூட்டைகள் தேங்கிகிடக்கிறது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்வதால் அறுவடை செய்த நெல்லை மழையில் இருந்து பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால் அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் உடனடியாக விற்பனை செய்யலாம் என்று கொள்முதல் நிலையங்களுக்கு சென்றால் நாட்கணக்கில் காத்துகிடக்கும் அளவிற்கு நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.
ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குடோன்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பாமல் தேங்கி கிடப்பதாலும் புதிதாக கொள்முதல் செய்ய தாமதம் ஏற்படுவதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக மாவட்டத்தில் உள்ள எடமணல், மாணிக்கபங்கு, மயிலாடுதுறை எம்.ஆர்.எம் மில், சித்தர்காடு குடோன், எருக்கூர் மில் ஆகிய இடங்களுக்கு உடனடியாக இயக்கம் செய்யவும் அரவைக்கு ரயில் மூலம் ஏற்றி அனுப்பி வைத்தும், மழைக்கும் முன் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
