ஏமனில் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை தற்போது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக காந்தபுரம் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, 2008ஆம் ஆண்டு ஏமனுக்குச் சென்று, அந்நாட்டு குடியுரிமையாளர் தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து 2014ல் ஒரு தனியார் கிளினிக் தொடங்கினார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மஹ்தி கைது செய்யப்பட்டதுடன், சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், மஹ்தி நிமிஷாவை மிரட்டியதோடு, அவருடைய பாஸ்போர்ட் ஒப்படைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் நிமிஷா பயன்படுத்திய மயக்க மருந்தால் மஹ்தி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏமன் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஜூலை 16ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, இது இந்திய அளவில் பெரும் கவனத்தை பெற்றது.
இந்த சூழலில், காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் உத்தரவின் பேரில், ஏமனின் பிரபல சூஃபி தலைவரும் அறிஞருமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ், தலால் மஹ்தியின் குடும்பத்துடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னணியில், நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது நிமிஷாவின் மரண தண்டனை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் காந்தபுரம் முஸ்லியார் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோளாக காட்டியுள்ளது. “சனாவில் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், மரண தண்டனையை முற்றிலும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்பத்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நிமிஷா பிரியாவின் சிறிய மகள் மிஷெல் வெளியிட்ட உருக்கமான வீடியோவில், “தயவுசெய்து என் அம்மாவை மீட்டு உதவுங்கள். நான் அவளை பார்க்க ஆசைப்படுகிறேன்” என உருக்கமாக கூறியிருந்தது.
இந்த சம்பவம், மனிதநேயம், சர்வதேச உதவித் தொடர்புகள் மற்றும் மத சமூகங்களின் ஒத்துழைப்பு மூலம் மரண தண்டனை தண்டனையின் மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.