அனுமந்தன்பட்டி நவீன சிறுவர் விளையாட்டுப் பூங்காவைத் திறந்து வைத்தார் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியில், அப்பகுதி சிறுவர் மற்றும் சிறுமிகளின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன விளையாட்டுப் பூங்காவை, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான என். ராமகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். 15 வார்டுகளைக் கொண்ட இந்தப் பேரூராட்சிப் பகுதியில், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பக் குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா வசதி இல்லை என்பது மக்களின் நீண்டகாலக் குறையாக இருந்து வந்தது. இது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று, துரித நடவடிக்கையாக இந்தப் பூங்கா தற்போது கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்ற கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, பூங்காவின் பெயர் பலகையைத் திறந்து வைத்து, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களைப் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், “குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு விளையாட்டு மிகவும் அவசியம். இந்தப் பூங்கா அனுமந்தன்பட்டி பகுதி குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்” எனத் தெரிவித்தார். நவீன சறுக்கு விளையாட்டுகள், ஊஞ்சல்கள் மற்றும் பசுமையான நடைபாதைகளுடன் கூடிய இந்தப் பூங்கா, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பேரூராட்சி மன்றத் தலைவர் சூ. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், செயல் அலுவலர் தி. சீனிவாசன், துணைத் தலைவர் விஜய பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றக் கவுன்சிலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைப் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜீவராஜ், அலுவலக உதவியாளர் ராஜ்குமார் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். பூங்கா திறக்கப்பட்ட உடனே குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அங்குள்ள உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். உள்ளூர் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, தங்களது கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் பூங்காவை அமைத்துக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அனுமந்தன்பட்டி பொதுமக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version