ஒரு ஃபினிசராக சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் எம்எஸ் தோனி ஏற்படுத்தி வைத்திருக்கும் லெகஸியானது, வேறு எந்த உலக வீரரும் நெருங்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது. அதிலும் 19வது மற்றும் 20வது ஓவரில் 43 வயதாகும் தோனி மட்டுமே அதிக சிக்சர்கள் அடித்த வீரராக ஐபிஎல் வரலாற்றில் வலம்வருகிறார். டெத் ஓவரில் அதிகப்படியாக 183 சிக்சர்களை அடித்திருக்கும் தோனிக்கு அடுத்த இடத்தில் 127 சிக்சர்களுடன் அதிரடி வீரர் கிரன் பொல்லார்டு நீடிக்கிறார். இப்படியான ஒரு மரபை கொண்டிருப்பதால் தான், சிஎஸ்கே அணியில் வேறுஎந்த பேட்ஸ்மேனும் அடிக்காத போதும் கூட, தோனி ஏன் இண்டண்ட் காமிக்கவில்லை என்ற ஆதங்கத்தை சிஎஸ்கே ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.
ஆனால் எப்படி சிஎஸ்கே அணியின் சிறந்த பந்துவீச்சானது, அவர்களின் மோசமான பேட்டிங்கால் மறைக்கப்பட்டதோ, அப்படித்தான் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அவருடைய வேலையை சரியாக செய்த ஒரே வீரராக இருந்த தோனியும் மறைக்கப்பட்டார். அதை உணராத சில ரசிகர்கள் தோனியை கடுமையான சொற்களால் வசைபாடினர். சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான 5 தோல்விகளும் அதற்கு பெரிய காரணமாக அமைந்தது.
இந்த கடினமான சூழலில் 5 தொடர் தோல்விக்கு பிறகு வெற்றியை தேடி களம்கண்ட தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார். சிஎஸ்கே அணியில் அஸ்வின், கான்வே இருவரும் வெளியேற்றப்பட்டு 20 வயது இளம்வீரரான ஷைக் ரஷீத் மற்றும் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் இருவரும் அணியில் இடம்பிடித்தனர். மிகச்சரியான பிளேயிங் லெவன் கலவையோடு களம்கண்ட சென்னை அணி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு ஒரு அசாத்தியமான கேட்ச் மூலம் எய்டன் மார்க்ரமை 6 ரன்னில் வெளியேற்றிய திரிப்பாத்தி முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்துவந்தார். அடுத்து களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரிகளை விளாசினாலும் அவரை 8 ரன்னில் அவுட்டாக்கிய அன்சுல் கம்போஜ் கலக்கிப்போட்டார்
விரைவாகே லக்னோ அணி இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை இழந்தாலும் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என இண்டண்ட் காமித்த மிட்செல் மார்ஷ் ஆபத்தான வீரராக தெரிந்தார். ஆனால் அவருடைய மிடில் ஸ்டம்பை தகர்த்த ஜடேஜா 30 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். மார்ஷ் வெளியேறினாலும் அடுத்து களத்திற்கு வந்த ஆயுஸ் பதோனி ஓவர்டன் வீசிய அடுத்தடுத்த 2 பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.
அதற்குபிறகு 2 முறை அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்ட போதும் DRS மூலம் தப்பித்த ஆயுஸ் பதோனி, 22 ரன்னில் இருந்தபோது ஜடேஜாவிடம் சிக்கினார்.
ஒருபுறம் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தாலும் தனியொரு ஆளாக போராடிய கேப்டன் ரிஷப் பண்ட் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வெளுத்துவாங்க 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 166 ரன்களை அடித்தது. ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்து அசத்தினார்.