தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் காகங்கள் அதிக அளவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், காகங்கள் உயிரிழந்ததற்குக் காரணம் ‘பறவைக் காய்ச்சல்’ (Bird Flu) தொற்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தமிழக அரசுக்கு உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
தற்போது சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இது குறித்துத் தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், தற்போது வரை மற்ற பறவைகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ இந்தத் தொற்று பரவியதற்கான பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
உயிரிழக்கும் காகங்கள் அல்லது இதர பறவைகளைத் பொதுமக்கள் வெறும் கையால் தொட்டு அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு செய்ய நேர்ந்தால் முறையான பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஒருவேளை யாருக்காவது காய்ச்சல், இருமல் அல்லது சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காகங்களின் உயிரிழப்பு குறித்துக் கால்நடைத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நபர்களைக் கண்டறியச் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.















