சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “திமுக அரசு மீது எப்போதும் குறை சொல்வதை தங்களது வாடிக்கையாக கொண்டிருப்பவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
அதிமுக, ஈ.வெ.ரா இயக்கத்தின் அடிப்படையில் வளர்ந்த கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்த காலங்களில் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற சக்திகள் தமிழகத்தில் வேரூன்றாமல் தடுத்தனர். ஆனால் தற்போதைய அதிமுக தலைவர் பழனிசாமி, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவாக நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அதிமுக ஆர்எஸ்எஸ் பாதையில் செல்கிறது என்பதை உணர முடிகிறது என்றார்.
அதேபோல், நடிகர் விஜய் தொடர்பாகவும் அதே வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பதைக் குறிப்பிட்ட அவர், “விஜய் அவர்களின் பேச்சு மற்றும் செயலில் அத்தகைய சாயல் இருப்பதாகவே சிலர் நம்புகின்றனர். ஆனால் அவர் எச்சரிக்கையுடன் இருப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையில் ஒரு சாம்பிளிங் சர்வே மட்டுமே, அது சென்சஸ் அல்ல. எனவே மத்திய அரசு அதை ஏற்காது. சட்டரீதியாகவும் அதற்கு இடமில்லை. மாநில அரசு ஒரு சர்வே எடுப்பது தவறு அல்ல, ஆனால் அதை மத்திய அரசு அதிகாரபூர்வ கணக்கெடுப்பாக ஏற்க முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பொறுப்பு; அது ஜாதிவாரி அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்று அவர் வலியுறுத்தினார்.
சமூக நீதி நோக்கம்
திருமாவளவன் மேலும் கூறியதாவது:
“அதிமுக ஒரு திராவிட இயக்கத்தின் கிளை என்கிற நம்பிக்கையில்தான் எங்கள் விமர்சனங்கள் வருகின்றன. அதை திராவிட இயக்கம் என ஏற்க மறுப்பின், அப்படியான விமர்சனங்களை இனி முன்வைக்க மாட்டோம். எங்களின் நோக்கம் சமூக நீதி பக்கம் தான்” என்றார்.