திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகவும், அடுத்த சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கோருகிறது எனவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் எழுச்சி பயணத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி, இன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு என்ன திட்டம் கொண்டு வந்தார் ? அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 400 கோடி ரூபாயில் அடித்தளம் அமைத்தோம். நாங்கள் கட்டிய மருத்துவமனையை திறந்து வைத்து திமுக அரசு புகழ் பெற்றது,” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக-காங்கிரஸ் கூட்டணியை சாடிய அவர், “நெல்லையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 117 தொகுதிகள் வேண்டும் என்று நேரடியாக தெரிவித்துள்ளார். சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் கூட ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் கூட்டணிக்குள் விரிசல் வெளிப்படையாகியுள்ளது,” என்றார்.
அத்துடன், திமுகவை காப்பாற்றியது அதிமுக தான் என்றும், “கருணாநிதி காலத்தில் கட்சி சிதறும்போது கைப்பற்ற நினைத்தவர்களிடமிருந்து திமுக அலுவலகத்தை பாதுகாத்தது ஜெயலலிதா. அதிமுக எப்போதும் பிறருக்கு உதவிய கட்சி,” என நினைவூட்டினார்.
கனிமொழி கூறிய “அதிமுக அலுவலகம் டெல்லியில் உள்ளது” என்ற கருத்துக்கும் அவர் பதிலளித்து, “அதிமுக அலுவலகம் சென்னையில்தான் உள்ளது; அதைச் சென்று பாருங்கள். எவ்வளவு சதிகள் செய்தாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது,” எனத் தெரிவித்தார்.