கொரோனா மீண்டும் உலகத்தை அச்சுறுத்த தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போட்டவர்களுக்குக் கூட மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் புதிய வகையுடன் பரவத் தொடங்கியுள்ளதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய தொற்றால் பெரும்பாலோர் லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், கொச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் வெளியிட்டுள்ள தகவலில், “முன்பு கொடுக்கப்பட்ட தடுப்பூசிகள், தற்போது பரவும் புதிய வகை கொரோனாவை எதிர்க்க அதிக சக்தி அளிக்கவில்லை. உடல்நிலை காரணமாக மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால், தடுப்பூசி போட்டவர்களும் மீண்டும் தொற்றுக்கு ஆளாகலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது பருவமழைக்காலம் என்பதால் பல வகை வைரஸ்கள் பரவ வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், கொரோனா வைரஸும் அதனடிப்படையில் தாக்கம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பேணுவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.