பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:- மயிலாடுதுறை மாவட்ட அரசினர் மருத்துவமனை முன்பு 3-வது நாளாக காத்திருக்கும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினரை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணை செயலாளர் சந்தித்து ஆதரவு:-
தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 8000 செவிலியர்கள் 10 ஆண்டுகளாக இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பணி நிரந்தரம் செய்வதாக அரசு அறிவித்திருந்த நிலையில், பணி நிரந்தரம் செய்யப்படாததால் ஒப்பந்த செவிலியர்கள் சென்னையிலும், மாநிலம் முழுவதும் மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவடத்தில் சுமார் 200 ஒப்பந்த செவிலியர்கள் உள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்களை தவிர்த்த மற்ற ஒப்பந்த செவிலியர்கள் மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 3-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களை, நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும், கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணை செயலாளருமான காசி.ராமன் இன்று சந்தித்தார். அப்போது, ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை கேட்டறிந்த காசிராமன், ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்தார்.
