பாஜக மாநில செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மீது, நீதிமன்ற மரியாதையை மீறியதாக சென்னை உயர்நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
தலைஞாயிறு பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவின் விசாரணை, உயர்நீதிமன்ற நீதிபதி கே. ராஜசேகர் முன் நடைபெற்றது. அந்த நேரத்தில், வழக்கறிஞராக அஸ்வத்தாமன் காணொலி மூலம் ஆஜரானார்.
ஆனால், வழக்கறிஞர் கோட் அணியாமல் வெள்ளை சட்டை மட்டும் அணிந்திருந்தது நீதிபதியின் கவனத்திற்கு வந்தது. இதனால் நீதிபதி அதிருப்தி தெரிவித்து, “நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் ஆஜராக வேண்டாமா?” எனக் கேட்டார்.
இதற்கு, தோள்பட்டை வலி காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் கோட் அணிய முடியவில்லை என்று அஸ்வத்தாமன் விளக்கம் அளித்தார். ஆனால் அந்த காரணத்தை நீதிபதி ஏற்க மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் அஸ்வத்தாமனுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வரும் அக்டோபர் 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
 
			















