திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு நேதாஜி சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலையானது வீரராகவர் கோயில் முதல் நகராட்சி பூங்கா வரை உள்ள இந்த சாலை திருவள்ளூர் பஜாருக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் மழைநீர் கால்வாய் இல்லாததால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் நேதாஜி சாலையில் இருந்து வீரராகவர் கோயில் குளம் வரையில் 1200 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழைக்கு முன்பாக பணிகளை விரைவாக முடிகவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகர செயலாளர் சி.சு.ரவி,முன்னாள் சேர்மன் பொன்.பாண்டியன் உள்ளிட்ட நகராட்சி ஆணையாளர், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்

















