புதுடெல்லி : காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டதாக பா.ஜ. தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதாப் பந்தாரி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். “இந்தியாவுக்கு எதிராக நேரடி போரில் பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது. என் ரத்தத்தில் ரத்தம் அல்ல, கொதிக்கும் சிந்தூர்தான் ஓடுகிறது. பாகிஸ்தான் எனது இருப்பை மறந்துவிட்டது ; ஆனால் நான் நெஞ்சையும் தலையையும் நிமிர்த்தி நிற்கிறேன்,” என்று வலியுறுத்தினார்.
பிரதமரின் இந்த உரையை விமர்சித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவின் பெருமையில் பிரதமர் மோடி சமரசம் செய்வது ஏன் ? டிரம்ப்பிடம் பணிந்து இந்திய நலன்களை தியாகம் செய்ததற்கான காரணம் என்ன? கேமரா முன்னிலையில்தான் ரத்தம் கொதிப்பதா?” எனக் கேள்விகள் எழுப்பினார்.
ராகுலின் இந்த பேச்சு பா.ஜ.வினரிடையே கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தனது எக்ஸ் பதிவில், “பிரதமர் உரையை பார்க்க நீங்கள் 10 நாட்கள் எடுத்திருந்தாலும், அதை பார்த்தது நல்லதே. காங்கிரஸ் முந்தைய போன்று காதல் கடிதம் அனுப்பவில்லை; மோடி அரசு வலிமையான பதிலடி கொடுத்துள்ளது,” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ. செய்தித் தொடர்பாளர் பிரதாப் பந்தாரி, “காங்கிரஸ் இன்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டது,” எனக் குற்றம்சாட்டினார்.