நெல்லை: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி பெற்றுள்ள வெற்றிக்கு முழுப் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கே என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பீகாரில் 243 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நிறைவடைந்த நிலையில், 67.13% வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜேடியூ–பாஜக கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலை வகிக்க, இதில் பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 91 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மைக்கு சென்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பணகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கடுமையாக விமர்சித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள “13 முறை சிறப்பு வாக்காளர் திருத்தம் நடந்தது” என்ற வாதத்தில் உண்மையில்லை என அவர் கூறினார்.
“முந்தைய காலங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுத்த ஆணையர்கள் வாக்காளர் பட்டியலை சீராய்வு செய்தனர். ஆனால் தற்போது இருப்போர் அரசியல் அழுத்தத்தில் செயல்படுகிறது போலத் தோன்றுகிறது. உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கம், புதிய வாக்காளர் சேர்க்கை போன்ற நிலையான நடைமுறைகள் இப்போது பின்பற்றப்படவில்லை. 12 மாநிலங்களில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன,” என அவர் கூறினார்.
பீகார் தேர்தலுக்கு முன் அரசு பெண்களுக்கு ரூ.10,000 நிதி வழங்கியது குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததே சிக்கல்களுக்கு காரணம் என சபாநாயகர் கூறினார். “சர்வசிக்ஷா அபியான், வெள்ள நிவாரணம் போன்ற நிதிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. தமிழகத் திட்டங்களுக்கு மத்திய அரசு தடையாக உள்ளது; ஆனால் பாஜக தமிழக பிரிவை அரசாங்கம் எதிர்க்கவில்லை,” என்றார்.
2026 தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்பாவு, “தமிழ்நாட்டில் பீகார் போன்ற சூழல் ஏற்படாது. மக்கள் திமுக அரசின் பணிகளை நம்புகிறார்கள். எனவே 2.0 மக்களாட்சியாக ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள அனியாயத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
















