தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர், கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தின் மதபோதகராக இருந்ததோடு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அப்போது அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான் ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், கேரள மாநிலம் மூணாறு அருகே பதுங்கி இருந்தபோது கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள், ஜான் ஜெபராஜை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, ஜான் ஜெபராஜை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.