திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தமிழ் கடவுளான முருகப் பெருமானின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறாகப் பேசியதாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிக்கு எதிராக இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் ஆன்மீக பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கறிஞர் ஜோதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, ‘முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம், ஆனால் ஒரு இடத்தில் மட்டும்தான் தீபம் ஏற்ற முடியும்’ என்று கிண்டலாகப் பேசியுள்ளார். இந்து பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு, அவர்களின் நம்பிக்கையையும் கடவுளையும் இழிவுபடுத்துவது, சொந்தக் காசில் சூனியம் வைப்பது போன்றது. திமுகவினரின் வழக்கமான இந்து மத எதிர்ப்புப் போக்கையே ஜோதியும் கடைபிடித்துள்ளார். அறநிலையத் துறை உடனடியாக இவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறுகையில், “திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதியின் வாதம் வக்கிரமானது. ‘முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம் என்பதற்காக இரண்டு இடங்களில் தீபம் ஏற்ற முடியுமா?’ என்ற அவரது கேள்வி முருகப் பெருமானை மிக மோசமாக அவமதிப்பதாகும். மற்ற மதக் கடவுள்களைப் பற்றி இப்படிப் பேசும் துணிச்சல் இவருக்கு வருமா? இந்து விரோதச் சிந்தனையை நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய ஜோதியை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சூர்யாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “வாதம் என்ற பெயரில் முருகப் பெருமானின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்துவது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவதை திமுக ஒருபோதும் கைவிடாது என்பதற்கு இதுவே சாட்சி. இந்து சமய அறநிலையத் துறை என்பது கோவில்களைப் பாதுகாக்கவா அல்லது இறை நம்பிக்கையைச் சிதைக்கவா? என்பதற்கு அமைச்சர் சேகர்பாபு உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறியுள்ள நிலையில், தற்போது வழக்கறிஞரின் பேச்சு புதிய அரசியல் மற்றும் மத ரீதியான சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
















