மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.87 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சீர்காழி வட்டம் அல்லிவிளாகம் கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக விளைநிலங்களில் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரும்பின் தரம் மற்றும் நீளம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் இருப்பதை உறுதி செய்த அவர், விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதைக் கண்காணித்தார்.

இந்த ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் ஸ்ரீகாந்த், தமிழகம் முழுவதும் உள்ள 2,17,47,003 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரூ. 3000 ரொக்கம் வழங்கும் திட்டத்திற்காக அரசு ரூ. 6772.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 443 நியாயவிலைக் கடைகள் மூலம் மொத்தம் 2,87,390 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஜனவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 8-ஆம் தேதி (இன்று) முதலமைச்சரால் மாநில அளவில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகப் பணிகள் தொய்வின்றி நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, விற்பனை முனைய இயந்திரத்தில் (e-POS) விரல் ரேகை சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் மட்டுமே பயனடைவதை உறுதி செய்யும் வகையில், அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் பரிசுத் தொகுப்பை வழங்கக் கூடாது என விற்பனையாளர்களுக்குக் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விநியோகம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும், மயிலாடுதுறை பொது விநியோகத் திட்டக் கட்டுப்பாட்டு அறையை 04364 – 227752 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் நளினா மற்றும் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Exit mobile version