கோவை:
கோவை விமான நிலையம் அருகே மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து, இன்று அதிமுக, தவெக மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் தங்கி படித்து வந்தார். அவர் நேற்று முன் தினம் இரவு தனது ஆண் நண்பருடன் விமான நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்த போது, மதுபோதையில் இருந்த மூவர் கும்பல் தாக்கி, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி சார்பில் இன்று காலை 11 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட உள்ளன.
அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் இன்று மதியம் 12 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
“கோவையில் நடந்த பாலியல் வன்கொடுமையால் தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்” என தவெக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்குமுன், பாஜக மகளிர் அணி சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களின் பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே வழங்கும் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை (நவம்பர் 5) தமிழகமெங்கும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் மாநிலத் தலைமை அறிவித்துள்ளது.
