கோவை மாநகரையே உலுக்கிய கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் இன்று (மார்ச் 7) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு, கோவை பீளமேடு விமான நிலையம் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியைக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் வன்கொடுமை செய்த வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு கிடைத்துள்ளது.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கருப்பசாமி, அவரது தம்பி காளீஸ்வரன் மற்றும் அவர்களது கூட்டாளி தவசி ஆகிய மூவரையும், சம்பவம் நடந்த அடுத்த நாளே துப்பாக்கிச் சூடு நடத்திப் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜ் முன்னிலையில் கடந்த 4 மாதங்களாக மிகத் துரிதமாக விசாரணை நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் சுமார் 270 பக்கங்களைக் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 112 சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 72 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சென்னையைச் சேர்ந்த தடயவியல் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனை அதிகாரிகள் காணொலி வாயிலாகத் தங்களின் முக்கியச் சாட்சியங்களை முன்வைத்தனர்.
நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நீதிபதி சுந்தர்ராஜன் தனது தீர்ப்பை வாசித்தார். அதில், சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரச் செயல்களைத் தடுக்கும் விதமாக, கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவருக்கும் ‘சாகும் வரை ஆயுள் தண்டனை’ (Life imprisonment until death) விதிப்பதாக அறிவித்தார். இந்தத் துரித கால தீர்ப்பும், கடுமையான தண்டனையும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியானதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
