கோவைப்புதூர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ‘ஏ கிரவுண்ட்’ என அறியப்படும் விளையாட்டு மைதானத்தை, ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான அறிவிப்பாணையைத் திமுக அரசு வெளியிட்டது. அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மற்றும் பாஜக சார்பில் நேற்று (நவம்பர் 12, 2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவைப்புதூர் ‘ஏ கிரவுண்ட்’, பல விளையாட்டு வீரர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கியதுடன், முதியோர்கள் மற்றும் இளைஞர்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் மையமாகவும் இருந்து வருகிறது.மைதானத்தைத் தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து குனியமுத்தூர், இடையர்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை அதிமுக பகுதிச் செயலாளர்கள் தி. மதனகோபால், கே.ஆர். செல்வராஜ், சி.கே. விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் எஸ். மணிமேகலை மற்றும் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் புரட்சித் தம்பி ஆகியோர் முன்னிலையில் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மைதானத்தை மீட்கும்வரை போராட்டம் ஓயாது என்று முழக்கமிட்டு, திமுக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களைப் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
ஜனநாயக ரீதியில் போராடியவர்களைக் கைது செய்ததற்குச் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கைதானவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பண நோக்கமே காரணம்: “கோவைப்புதூர் ‘ஏ கிரவுண்ட்’-ஐ, திமுக அரசு பணம் சம்பாதிக்கும் நோக்குடன் இணையதளத்தில் தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதாக அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.”
“முன்னதாக, கோவைப்புதூர் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறையால் அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜக மற்றும் பொதுமக்களை போலீசார் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.” மேலும், “திமுகவினரே டெண்டர் அறிவித்து விட்டு, பின்னர் திமுகவினரே விளையாட்டு மைதானத்தை மீட்டு விட்டதாகப் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மக்களை ஏமாற்றி நாடகம் நடத்துகின்றனர்” என்றும் அவர் குற்றம் சாட்டினார். எஸ்.பி. வேலுமணி, மைதானம் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை அதிமுக தொடர்ந்து போராடும் என உறுதி அளித்தார். அதிமுக ஆட்சியில் எதிர்கட்சிகளின் போராட்டங்களுக்கு ஜனநாயக ரீதியாக அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது திமுக அரசு எதிர்கட்சிகளின் போராட்டங்களைக் கைது மூலம் ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

















