புதுடில்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ முழுமையான வெற்றியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று (மே 14) டெல்லியில் உள்ள இராச்திரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப்படைத் தளபதி வி.ஆர். சௌதுரி மற்றும் கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இயக்கிய இந்த தாக்குதலில், ஒன்பது பயங்கரவாத தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. எல்லைக்கோட்டைத் தாண்டாமல், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக நடத்தப்பட்ட இந்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளையே வியக்க வைத்தது.
இச்செயல் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தற்காலிக போர் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முப்படை தளபதிகளின் வீரத்தை பாராட்டிய ஜனாதிபதி, இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக எடுத்த முடிவுகளை உலகம் பெரிதும் பாராட்டும் வகையில் மாற்றியமைத்துள்ளது என திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் ஜனாதிபதி மாளிகையின் சமூக வலைதள பக்கங்களில். பகிரப்பட்டுள்ளன.

















