தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் 7 கேள்விகள் !

தலைமைத் தேர்தல் ஆணையர் டில்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இண்டி கூட்டணியினர் முன்வைத்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, தேர்தல் ஆணையம் மேலும் புதிய கேள்விகளை எழுப்பியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அவர் எழுப்பியுள்ள கேள்விகள் பின்வருமாறு :

வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எவ்வாறு இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற இளைஞர்கள் எத்தனை பேர் சேர்க்கப்பட்டனர் என்பது தொடர்பான தரவுகள் உள்ளனவா?

வாக்காளர் பதிவு விதி 1960ன் கீழ் விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, பீஹார் மாநிலத் தேர்தலில் பெருமளவில் வாக்காளர்கள் விலக்கப்பட வாய்ப்பு தருகிறது. இதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது ?

பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளுமா ?

2025 மே 1ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 2025 ஜூலை 17ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும் ?

வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது என்ன ?

நியாயமான தேர்தல்களே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருந்தால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்க வேண்டாமா ?

    இவ்வாறு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

    Exit mobile version