சென்னை :
அடையாறு உப்பங்கழியில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் காலத்தில், 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பூங்கா, 58 ஏக்கர் பரப்பளவில் 2011ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
பின்னர், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், பூங்காவை மேம்படுத்தும் பணிகள் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மறு மேம்பாட்டு பணிகளில், நவீன நுழைவு வாயில், பார்வையாளர் கோபுரம், நடைபாதைகள், இணைப்பு பாலம், சிற்றுண்டி விடுதி, குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் உள்ளிட்ட பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி மாணவர்களுடன் இணைந்து பூங்காவை சுற்றிப்பார்த்தார். மேலும், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கான புதிய வாகனங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இத்துடன், தொல்காப்பியப் பூங்காவின் பகுதி 1 மற்றும் 2-ஐ இணைக்கும் வகையில் சாந்தோம் சாலையில் உயர்நிலை நடைமேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
			

















