அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையிலிருந்தே அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 23) சென்னை அயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இருந்து, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முன்னேற்றங்களைப் பற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த காணொலி கலந்துரையாடலில் கோவை, கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள திட்டங்கள், அதன் தாக்கம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் விவரமாக ஆலோசித்தார்.
அதோடு, முகாம்களுக்கு வந்த பொதுமக்களிடம் நேரடியாக உரையாடிய முதல்வர், அவர்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டு கருத்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், முதல்வர் தனது பணிகளை திறம்பட மேற்கொண்டு வருவது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.